தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களில் 50% இடங்களுக்கான கட்டணங்கள் அந்தந்த மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளால் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டண சலுகை அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்ற மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்றும், அரசு ஒதுக்கீடு 50%- க்கும் குறைவாக இருந்தால் அந்த கட்டண சலுகை மற்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த மருத்துவக் கல்லூரியும் கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி லாபத்திற்கானது அல்ல என்ற கொள்கை பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கல்லூரி நடத்துவதற்கான செலவுகள், கல்வி கட்டணத்தில் சேர்க்கப்படலாம்; அதே நேரம் அளவுக்கு அதிகமான செலவுகள், அதிக லாபம் போன்றவை கல்விக் கட்டணத்தில் சேர்க்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.