உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேசிய, மாநில பேரிடர் குழுவினர் அங்கு குவிந்தனர். மேலும், சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் இங்கு கொண்டு வரப்பட்டு, சுரங்கத்தின் 47 மீட்டர் தொலைவு அளவில் துளையிட்ட போது துரதிர்ஷ்டவசமாக இயந்திரம் உடைந்தது. இதனால், தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையில், தொழிலாளர்கள் சீராக இருக்க, குழாய் மூலமாக உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 2 வாரத்துக்கு மேலாக நீடித்து வந்தும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்கள் காப்பாற்றப்படுவார்களா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் தான், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்று துளையிடும் அனுபவம் வாய்ந்த 12 சுரங்கப்பணியாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு, அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்ட நிலையில், 800 மி.மீ விட்டமுள்ள குழாய்க்குள், மீதமுள்ள 13 மீட்டர் பாதையை 21 மணி நேரத்தில் துளையிட்டு முடித்தனர். இதனைத் தொடர்ந்து, 17 நாள்கள் போராட்டத்திற்கு பின் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் படையினர் வெற்றிகரமாக்கினர். இதன் பின்னர், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருவராக, ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தனர். இந்த மீட்பு பணிக்கும் பேருதவியாக இருந்த எலி வளை தொழிலாளர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வர தொடங்கின.
தங்கள் உயிரைப் பணயம் வைத்த, எலிவளை சுரங்கத் தொழிலாளர் ஒருவர் வீட்டை டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தரைமட்டாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட எலி வளை சுரங்கத் தொழிலாளர் குழுவுக்கு தலைமை தாங்கியவர் வகீல் ஹாசன். இவர் டெல்லி கஜோரி காஸ் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், டெல்லி மேம்பாட்டு ஆணையம், கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாக கூறி பல வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த இடிப்பு நடவடிக்கை பணியில், வகீல் ஹாசனின் வீடும் இடிக்கப்பட்டது.
இதனால், வகீல் ஹாசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாலையோரத்தில் தங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய வகீல் ஹாசன், “இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீடுகளை இடிப்பது தொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய முன்னறிவிப்பின்றி எங்கள் வீடு இடிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இது தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.