கடந்த 2018- ஆம் ஆண்டு, யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம், இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்திய சினிமா ரசிகர்களால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தது படக்குழு.
இந்த நிலையில், கே.ஜி.எஃப்.- 2 படம் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும், அதற்கான ட்ரெய்லர் இன்று (27/03/2022) மாலை 06.40 மணிக்கு வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எஃப்.- 2 படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன், படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரானது 2 நிமிடங்கள் 56 வினாடிகளை கொண்டது. யூடியூப் பக்கத்தில் வெளியான தமிழ் மொழி ட்ரெய்லரை, சில மணி நேரத்திலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதனிடையே, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இன்று (27/03/2022) மாலை 06.00 மணிக்கு கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் உங்கள் படமும் வெளியாகவுள்ளது, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? போட்டி எப்படி இருக்கும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் யஷ், "கே.ஜி.எஃப். Vs பீஸ்ட் என்று நினைக்கவில்லை; கே.ஜி.எஃப். அண்ட் பீஸ்ட் என்று நினைக்கிறேன். தேர்தலில் தான் ஒருவருக்கு ஒரு ஓட்டு இருக்கும். அதிக ஓட்டு யாருக்கு விழுகிறதோ அவர்கள் ஜெயிப்பார்கள். மற்றவர்கள் தோல்வி அடைவார்கள். இது அரசியல் கிடையாது; சினிமா. இதில் ஒருவருக்கு ஒரு ஓட்டு கிடையாது; இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும். விஜய் மீது எனக்கு மதிப்பு உள்ளது. நானும் விஜய் படம் பார்ப்பேன். எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்" என்றார்.