2020-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் கடந்த வியாழக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்றது.
சென்னை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடருக்கான இந்த ஏலத்தின் ஏல பட்டியலில் 332 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இருந்து ஒவ்வொரு அணியும், தங்களிடம் உள்ள பணத்திற்கு ஏற்ற வகையில் வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), இயான் மோர்கன் (இங்கிலாந்து), வருண் சக்ரவர்த்தி (இந்தியா), டாம் பாண்டன் (இங்கிலாந்து), ராகுல் திரிபாதி (இந்தியா), கிறிஸ் கிரீன் (ஆஸ்திரேலியா), நிகில் சங்கர் நாயக் (இந்தியா), பிரவின் தாம்பே (இந்தியா), எம்.சித்தார்த் (இந்தியா) ஆகியோரை ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் கொல்கத்தா அணி தேர்வு குறித்து கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கம்பீர் இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், " கொல்கத்தா அணி கம்மின்ஸ்சை வாங்கி இருப்பது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகும். ஒட்டு மொத்த கொல்கத்தா அணியை நீங்கள் பார்த்தால் ரஸல், இயான் மோர்கன், சுனில் நரேன் போன்ற வீரர்களுக்கு சரியான மாற்று வீரர்கள் இல்லை. ஒருவேளை மோர்கனுக்கு காயம் ஏற்பட்டால் மிடில் ஆர்டரில் விளையாட சரியான வெளிநாட்டு வீரர் அணியில் இல்லை. அணியை மேலும் வலுப்படுத்த கொல்கத்தா அணி நிர்வாகம் மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ்சை எடுத்து இருக்கலாம். அதேபோல் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் காயமடைந்தால், அவர்களுக்கு பதிலாக தகுதியான மாற்று வீரர்கள் இல்லை" என தெரிவித்துள்ளார்.