கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் போது ஐஸ்கிரீம் பெட்டிக்குள் மறைந்து இருந்த 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ளது நஞ்சன்கூடு. அந்த பகுதியில் உள்ள மெசாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். நாகராஜின் மகள் பாக்கியா மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த காவியா என்ற இரு சிறுமிகளும் சக நண்பர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி உள்ளனர். அப்பொழுது நாகராஜ் வீட்டுக்கு அருகிலிருந்த ஐஸ் க்ரீம் பெட்டிக்குள் காவியாவும், பாக்யாவும் போய் ஒளிந்து கொண்டுள்ளனர். பல நாட்களாக திறக்கப்படாமல் இருந்த அந்த பெட்டிக்குள் இருவரும் ஒளிந்து கொண்ட நிலையில், உள்ளே மயக்கமுற்ற நிலையில் சிக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் பாக்யா மற்றும் காவ்யாவை நண்பர்கள் தீவிரமாக தேடியும் கிடைக்காததால் பெற்றோர்களிடம் சொல்லியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சிறுமிகளைத் தேடி நிலையில் ஐஸ்கிரீம் பெட்டிக்குள் சிறுமிகள் இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
உயிரிழந்து கிடந்த சிறுமிகளின் உடல்களை பார்த்து பெற்றோர்களும் உறவினர்களும் கதறி துடித்தனர். சிறுமிகள் உயிரிழந்து கிடந்த ஐஸ்கிரீம் பெட்டியானது வெளியிலிருந்து மட்டுமே திறக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்ற சிறுமிகள் வெளியே வர கதவைத் திறக்க முடியாமல் மூச்சு முட்டி இறந்து போனதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுமிகள் இறந்ததும் பெற்றோர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் அவர்களின் உடலை எரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவத்தில் பெற்றோர் மீது எடுக்க வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.