மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள் ஒரு வருடமாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தியா மட்டுமின்றி விவசாயிகளின் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க கவனம் பெற்றது. இந்தப் போராட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் அதிகளவில் கருத்துகள் பகிரப்பட்டு உலக அளவில் டிரெண்ட் செய்யப்பட்டன. இது உலக நாடுகளில் இந்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தின் போது இந்திய அரசால் ட்விட்டர் நிறுவனம் மிரட்டப்பட்டது என ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜாக் டோர்ச் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஜாக் டோர்ச் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், ‘ட்விட்டர் நிறுவனம் வெளிநாட்டு அரசு தரப்பிலிருந்து ஏதேனும் அழுத்தங்களை மேற்கொண்டுள்ளதா’ எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜாக் டோர்ச், “இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அது தொடர்பான பதிவுகளை வெளியிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என இந்திய அரசால் நாங்கள் மிரட்டப்பட்டோம். ட்விட்டரை இந்தியாவில் கட்டுப்படுத்துவோம் என எச்சரிக்கை விடப்பட்டது. இந்தியாவில் ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் என்றும் மிரட்டப்பட்டது. அதுபோல், சில ஊழியர்களின் வீடுகளில் ரெய்டும் நடந்தன. இவை எல்லாம் ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்தது” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இது பற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவிக்கையில், "ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் கருத்து நம் அனைவருக்கும் எச்சரிக்கையையும் அதிர்ச்சியையும் தருகிறது. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியின் குரல் மற்றும் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது. அதனால்தான் ராகுல் காந்தியின் ட்விட்டரை தடை செய்தனர். கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் எங்கே? பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புவோம்" எனத் தெரிவித்துள்ளார்.