கோவா சர்வதேச திரைப்பட விழா ஆசியாவின் மிகப்பழமையான திரைப்பட விழாவாகும். உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களும் திரையிடப்படும். 9 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இவ்விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் விருதுக்கான பட்டியலில் தேர்வாகி திரையிடப்பட்டிருந்தது. திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் படத்தை வெளிப்படையாகவே விமர்சனம் செய்துள்ளார்.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் இந்தாண்டு மார்ச் மாதம் 11ம் தேதி வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி, புனித் இஸ்ஸார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
இத்திரைப்படம் 1980 மற்றும் 90களின் காஷ்மீர் கிளர்ச்சி சமயத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டதை மையமாக கொண்டது எனச் சொல்லப்பட்டாலும் மக்களிடையே வெறுப்பு உணர்ச்சியை தூண்டும் வகையில் இருப்பதாகவே பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் சாடியிருந்தனர்.
இருப்பினும், பிரதமர் மோடி படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். இது படம் அல்ல. ஆவணம், சரித்திரம் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பாராட்டி இருந்தார். இதனைத்தொடர்ந்து பாஜக ஆளும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
பல சர்வதேச திரைப்பட விழாக்கள் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திரையிட மறுத்துவந்த நிலையில் கோவாவில் 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. விழாவின் கடைசி நாளான நேற்று நிறைவு விழாவில் பேசிய தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் படத்தை குறித்து வெளிப்படையாகவே விமர்சனம் செய்து பேசினார்.
விழாவில் பேசிய அவர், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். மிகவும் கெளரவமான இது போன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தை பார்த்தது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் எனப் பலரும் இத்திரைப்படம் குறித்து பாராட்டிப் பேசிய நிலையில் சர்வதேச திரைப்பட விழாக்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாய் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.