கேரள மாநிலத்தில் இருந்து நாடளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு (ராஜ்யசபா) தேர்ந்தெடுக்கப்பட்ட 3 உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூலை 1 ஆம் தேதியுடன் (01.07.2024) முடிவடைகிறது. அதாவது ராஜ்யசபா எம்.பி.களான பினோய் விஸ்வம், எளமரம் கரீம் மற்றும் ஜோஸ் கே.மணி ஆகியோர் ஓய்வு பெற உள்ளனர். இதனையடுத்து இந்தக் காலியிடங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 6 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 13 ஆம் தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 18 ஆம் தேதி ஆகும். வாக்கெடுப்பு ஜூன் 25 ஆம் தேதி காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 25 ஜூன் ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 05:00 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குச் சீட்டில் விருப்பத்தேர்வுகளைக் குறிக்கும் போது தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட விவரக்குறிப்பில் ஊதா (VIOLET) நிற வண்ண ஓவியப் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலே கூறப்பட்டதைத் தவிர தேர்தலில் வேறு எந்தப் பேனாவும் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.