நடப்பு அக்டோபர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 16 ரூபாய் உயர்ந்து, 625 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாதத்திற்கு ஒருமுறை காஸ் சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது.
இந்நிலையில், கடைகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியிலான, மானியமற்ற காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்தில் 51.50 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி நடப்பு மாதத்தில் இதன் விலை 1136 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வணிக சிலிண்டர்களின் விலை 1084.50 ரூபாயாக இருந்தது. சென்னையில் இவ்வகை சிலிண்டரின் விலை தற்போது 1174.50 ரூபாயாக உள்ளது.
அதேபோல், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா காஸ் சிலிண்டர்களின் விலை நடப்பு மாதத்தில் 16 ரூபாய் உயர்ந்து, 625 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், இதன் விலை 609 ரூபாயாக இருந்தது. வீடுகளில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்குகிறது. அத்தொகை வழக்கம்போல், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.