குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு கலவரங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது.
இந்த கலவரங்களில் 150- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமைக்காவலர் ரத்தன்லால் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு சமூக விரோத கும்பலே காரணம். டெல்லியில் வசிக்கும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் வன்முறையை விரும்புவதில்லை" என்றார்.
ஏற்கனவே உயிரிழந்த தலைமைக்காவலர் ரத்தன்லால் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கப்படும் என்று பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.