இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 428 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25-05-24) 7 மணியளவில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதன்படி, பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானா(10), ஒடிசா (6), மேற்கு வங்கம் (8), ஜார்க்கண்ட்(4), உத்தரப்பிரதேசம்(14), ஜம்மு-காஷ்மீர்(1) என இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்தநாக் தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இன்று (25-05-24) தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்குத் தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றம் சாட்டியும், போலீசாரின் அத்துமீறலைக் கண்டித்தும் தனது கட்சி நிர்வாகிகளுடன் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.