
உத்தரப் பிரதேச மாநிலம், பைசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜ்(41). இவருக்கு திருமணமாகி 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். சிராஜ் தனது குடும்பத்தோடு ஆறு வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்துக்கு வந்து குடியேறிவிட்டார். அதன் பின்பு, பெகம்பசாரில் உள்ள வளையல் கடையில் சிராஜ் வேலை பார்த்து வந்துள்ளார்.
சிராஜுக்கு குடும்ப பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர், தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று, தனது இரண்டாவது மகனையும் கொலை செய்துள்ளார். அதன் பிறகு, சிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த சிராஜ்ஜின் மூத்த மகன், வீட்டிற்கு வந்தபோது அங்கு குடும்பத்தினர் அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பதற்றமடைந்த அந்த சிறுவன், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிராஜ் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் எழுதிய அந்த கடிதத்தில், மன்னிப்புக் கேட்டு, அவர்களின் உடல்களை தங்கள் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.