உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பெல்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் காஷ்யாப். இவரது மனைவி மம்தா. இந்த தம்பதிக்கு, பிறந்து ஒரு மாதமான ஒரு பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையில், தம்பதியிடம் குழந்தை இல்லாததை கண்ட அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், தாய் மம்தாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இது குறித்து அந்த தம்பதி, மருத்துவமனைக்கு போகாமல், பேய் ஓட்டும் சாமியாரிடம் சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த சாமியார், தங்களின் ஒரு மாத கை குழந்தையை கொன்றால் தான் மம்தாவின் உடல்நிலை சரியாகும் என்று அறிவுரை கூறியுள்ளான். அவன் பேச்சை நம்பி, தம்பதியும் தங்களது பெண் குழந்தையை கொலை செய்து, குழந்தையின் உடலை காட்டில் மறைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியாரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், காட்டில் மறைத்து வந்த குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தையை கொலை செய்த தம்பதியை கைது செய்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.