உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். இந்த சம்பவத்தில் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி சுமார் 17 நாட்களாக நடைபெற்று, இன்று உண்மையிலேயே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஒரு தொழிலாளரை வெளியே அழைத்து வர 5 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இதனை கொண்டாடும் வகையில் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே இந்த மீட்புப் பணி முற்றிலுமாக வெற்றி அடைந்துள்ளது என தேசிய பேரிடர் மீட்புப்படை அறிவித்துள்ளது.
அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகின்றனர். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக பாடுபட்ட தொழிலாளர்களை நாடே வணங்குகிறது. அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் தாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஒருங்கிணைந்த முயற்சியால் தான் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மீட்புப் பணிகளுக்காக பிரதமர் அலுவலக அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும், மீட்புப் படையினருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.