நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் இன்று (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கேப்டன் வருண் சிங், 80% தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (வயது 63), அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்களின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங், லித்தர், சத்பல் ராஜ், விவேக்குமார், குருஷேவக் சிங், பி.எஸ்.தேஜா, ஜிதேந்தர் குமார், விமானப்படையைச் சேர்ந்த பி.எஸ்.சவுகான், கே.சிங், ராணா பிரதாப் தாஸ், பிரதீப் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.