இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசு கரோனாவைத் தவறாகக் கையாண்டதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரத்தை நாடாளுமன்றதிலும், மக்கள் மன்றத்திலும் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடருக்கு முதல் நாள் செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும், காங்கிரஸ் முதல்வர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டிசம்பர் மாதத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.