பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து நேற்று பஞ்சாப் சென்ற ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களோடு பொற்கோயில், துர்கியான மந்திர் மற்றும் பகவான் வால்மீகி தீரத் ஸ்தலம் ஆகியவற்றில் வழிபாடு நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் இருந்து ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து ஆகியோர் மெய்நிகர் காங்கிரஸ் பேரணியில் இருந்து உரையாற்றினார். இந்த மெய்நிகர் பேரணியில் உரையாற்றிய சித்து மற்றும் சரண்ஜித் சிங் சன்னி இருவருமே முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் கட்சி என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்பதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மெய்நிகர் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என என தெரிவித்தார். இந்த மெய்நிகர் பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது; முதல்வர் வேட்பாளரை அறிவிக்கக்கோரும் உங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவோம். பொதுவாக நாம் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை, ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினால் முதல்வர் வேட்பாளரையும் தேர்வு செய்வோம். இதுகுறித்து காங்கிரஸ் தொண்டர்களிடம் ஆலோசனை நடத்துவோம். முதல்வர் வேட்பாளரை அவர்கள் முடிவு செய்வார்கள்.
இரண்டு பேரால் ஆட்சியை வழிநடத்த முடியாது. ஒருவரால் மட்டுமே வழிநடத்த முடியும், ஒருவர் தலைமையேற்றால், மற்றொருவர் அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இருவரின் இதயத்திலும் காங்கிரஸ் எண்ணங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தியுள்ளனர். என நடந்தாலும் பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்கும் எதையும் அனுமதிக்க மாட்டோம். அனைவரையும் எப்படி அரவணைத்து செல்வது என்பது எங்களுக்கு தெரியும். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். மன்மோகன் சிங்கிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.