ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினுடைய ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், சில தினங்களுக்கு முன்பு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக பகீர் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆந்திராவில் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “அதிக குழந்தைகளைப் பெறுவதில் குடும்பங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதையும், வரும் ஆண்டுகளில், துடிப்பான இளைய மக்களை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜப்பான், சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் வயதான மக்கள்தொகையின் விளைவுகளை எதிர்கொள்கின்றன. அங்கு மக்கள்தொகையில் கணிசமான பங்கு வயதானவர்கள். மேலும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள இளைய தலைமுறையினர் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து முதியவர்களை மட்டுமே விட்டுச் செல்கின்றனர்.
தென் மாநிலத்தின் கருவுறுதல் விகிதங்கள் வீழ்ச்சியடைந்து 1.6 ஆக குறைந்துள்ளன. இது தேசிய சராசரியான 2.1 ஐ விட மிகவும் குறைவாக உள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால், ஆந்திரப் பிரதேசம் 2047க்குள் கடுமையான முதுமைப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். இது விரும்பத்தக்க எதிர்காலம் அல்ல, நாம் இப்போதே செயல்பட வேண்டும்” என்று கூறினார்.