பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்களில் பங்கேற்ற ஐஐடியில் படிக்கும் ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லிண்டென்தால். இவர் ஐஐடி வளாகத்தில் நடந்த போராட்டத்திலும், வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்திலும் பங்கேற்றார்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த பதாகை எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. அதில் “1933 முதல் 1945 வரை நாங்கள் அங்கே இருந்தோம்” என்று எழுதப்பட்டிருந்தது.
இது ஜெர்மனியை ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பேற்று பின்னர் இரண்டாம் உலகப்போர் முடிவில் தற்கொலை செய்து கொண்டது வரையிலான ஆண்டுகள் ஆகும்.
ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பேற்ற தொடக்கத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்கள் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஆனால், போகபோகத்தான் அவர்களை மொத்தமாக வெளியேற்றவும், அவர்களை படுகொலை செய்யவும் ஹிட்லர் அரசு நடவடிக்கை எடுத்தது. அதாவது இன்றைய பாஜக அரசின் குடியுரிமைச் சட்டமும் அதுபோலத்தான் ஒரு பயங்கர முடிவுக்கு கொண்டு செல்லும் என்று அந்த மாணவர் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அந்த மாணவரின் கல்வி விசா முடியும் முன்பே, அவரை அழைத்த இந்திய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், அவரை இந்தியாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். அதிகாரப்பூர்வ கடிதம் எதுவும் கொடுக்காமல் வாய்மொழியாகவே இந்த உத்தரவை அதிகாரிகள் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஜெர்மன் தூதரக அதிகாரிகள், அவருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க முன்வந்தனர். ஆனால், அவர் தனக்கு பயமாக இருப்பதாகவும் ஜெர்மனிக்கே திரும்பச் செல்வதாகவும் கூறிவிட்டார்.