உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 26 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 700-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 23,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் இளைஞர்கள் அதனை மதிக்காமல் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதாக தொடர்ந்து காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. சிலர் குழந்தைகளை பொதுவெளியில் அழைத்து செல்வது போன்ற நிகழ்வுகளும் நடந்துள்ளது. அதே போன்று ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. மராட்டிய மாநிலத்தில் சரக்கு ரயில் சென்று கொண்டிருக்கும் போது தண்டவாளத்தை இரண்டு வயது குழந்தை கடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்திற்கு அருகில் வசிக்கும் பெற்றோர்கள் கவனக்குறைவாக குழந்தை தண்டவாளத்தை கடக்கும் வரை பார்க்காமல் இருந்துள்ளனர். சரக்கு ரயில் ஓட்டுநர் இதை கவனிக்கவே, ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தியுள்ளார். குழந்தை தண்டவாளத்தை கடந்த பிறகு அவர் ரயிலை இயக்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.