
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே உஸ்கூர் பகுதியில், மத்தூரம்மா கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில், ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு தேரோட்டமும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்த கோயிலில் திருவிழா இந்தாண்டு நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி, நேற்று (22-03-25) தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு லேசான மழை பெய்தது. இதனால், பக்தர்கள் மழையில் தேர்களை இழுத்து வந்தனர். இந்த நிலையில், மழையில் வந்த காற்றால், 120 அடி உயரம் கொண்ட இரு தேர்களும் கீழே சாய்ந்தது. இதில் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
இருந்த போதிலும், தேர்கள் கீழே சாய்ந்ததில், ஓசுரைச் சேர்ந்த லோகித் என்பவரும், பெங்களூருவைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கோலாகலமாகக் கொண்டாடிய இந்த திருவிழாவில், தேர்கள் விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.