உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அலெக்ஸாண்டரை சந்திரகுப்தர் தோற்கடித்ததாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "சந்திரகுப்த மௌரியரின் பாரம்பரியம் சிதைக்கப்பட்டது. அலெக்ஸாண்டரை தோற்கடித்ததற்கான பெருமை அவருக்கு வழங்கப்படவில்லை. வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது! வரலாறு சந்திரகுப்த மௌரியரை ‘தி கிரேட்’ என்று கூறவில்லை. அது யாரை ‘தி கிரேட்’ என அழைக்கிறது? சந்திரகுப்தரிடம் தோற்றவரை ‘தி கிரேட்’ என அழைக்கிறது. அலெக்ஸாண்டரை ‘தி கிரேட்’ என அழைக்கிறார்கள். தேசம் ஏமாற்றப்பட்டது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் இதுகுறித்து மௌனம் சாதிக்கின்றனர்" என தெரிவித்தார்.
சந்திர குப்தர் ஆட்சிக்கு வந்த ஆண்டு எது என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. ஆனால் பொதுவாக கி.மு. 323இல் அலெக்ஸாண்டர் இறந்ததற்குப் பிறகு, கிமு 321இல்தான் சந்திரகுப்தர் ஆட்சிக்கு வந்ததாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் அலெக்ஸாண்டரும், சந்திரகுப்தரும் போரில் சந்தித்துக்கொண்டதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. இந்தச் சூழலில் யோகி ஆதித்யநாத், அலெக்ஸாண்டரை சந்திரகுப்தர் தோற்கடித்ததாக கூறியுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
இந்தநிலையில், யோகி ஆதித்யநாத்தின் கருத்தை அசாதுதீன் ஒவைசியும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துத்துவா ஒரு போலி வரலாற்று தொழிற்சாலை. சந்திரகுப்தரும் அலெக்சாண்டரும் போரில் சந்தித்ததில்லை. நமக்கு நல்ல பொதுக் கல்வி முறை ஏன் தேவை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. நல்ல பள்ளிகள் இல்லாத நிலையில், வசதிக்கேற்ப 'பாபா-லோக்' உண்மைகளை உருவாக்குகிறார். பாபா கல்வியை மதிப்பதில்லை என்பதை இது காட்டுகிறது" என கூறியுள்ளார்.