ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியில் இருந்து வருகிறது. இவர் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கூட பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை 21 நாட்களுக்கு விசாரித்து தூக்கிலிடும் புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றினார். இதன் மூலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாத துணிச்சலான முடிவினை அவர் எடுத்தார். இவ்வாறு அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தாலும் எதிர்கட்சியினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சில தினங்களாக ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கலந்துகொண்ட எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, இன்று மாநில அரசுக்கு எதிராக பின்நோக்கி நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். ஜெகனின் அரசால் மாநிலம் வளர்ச்சியில் பின்நோக்கி போவதாக குறிப்பிடும் வகையில் அவர் பின்நோக்கி நடந்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.