
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தென் தமிழகத்தில் 'புரவி' புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால், பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.