1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 352 தொகுதிகளையும், கம்யூனிஸ்ட்கள் 48 தொகுதிகளையும், ஜனசங்கம் 22 தொகுதிகளையும், காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் 16 தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜ் நாராயணன் போட்டியிட்டார். இதில் ராஜ் நாராயனணை தோற்கடித்து ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார்.
இந்த நிலையில், இந்திராகாந்தியின் வெற்றியை எதிர்த்து ராஜ் நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இந்திராகாந்தியின் வெற்றி செல்லாது என்று கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன்12 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹ தேர்தலில் வெற்றிபெற இந்திராகாந்தி பல்வேறு முறைகேடுகளில் ஈட்டுப்பட்டுள்ளார். அதனால் அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். மேலும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த தீர்ப்பு ஏற்படுத்திய நிலையில், அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் இந்திராகாந்தி. ஆனால் 1975 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி, கிருஷ்ண ஐயர் இந்திராகாந்தி மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இதனால் இந்திராகாந்திக்கு நெருக்கடி அதிகரித்து, கட்டாயம் பதவி விலகி ஆக வேண்டிய சூழல் உருவானது.
இந்த சூழலில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் முதல்முறையாக எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். எதிர்க்கட்சி தலைவர்கள் மீசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டு சித்ரவதைகள் செய்யப்பட்டனர். பத்திரிக்கைகள் தனிக்கை செய்யப்பட்டது. இதனால் மக்கள், அரசியல் கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது. பிற்காலங்கள் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தியதற்காக மக்களிடம் இந்திராகாந்தி மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இன்றளவும் எமர்ஜென்சி கலத்தை இந்தியா நாட்டின் கருப்பு தினமாகப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக காங்கிரசுக்கு எதிராக எமர்ஜென்சி காலத்தையே முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறது. இந்த நிலையில்தான், ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.