பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது தகுதி தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளது.
பல்வேறு மத்திய அரசு பணியிடங்களுக்கு வெவ்வேறு தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன. இதனை மாற்றி மத்திய அரசின் குரூப் பி, குரூப் சி பணியிடங்களுக்கு பொது தேர்வு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. upsc, ssc போன்ற வெவ்வேறு அமைப்புகள் மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்களில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பணியிடங்கள், குறிப்பிட்ட குரூப் பி பணியிடங்கள் (அரசிதழ் பதிவு பெற்றது), குரூப் சி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய பொது தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு நடத்த பிரத்யேகமான ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்.
தற்போது, அரசு வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் தனித்தனி தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது. இவற்றுக்கு ஒரே மாதிரியான தகுதிகள்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்காகவே பொது தகுதி தேர்வு என்ற ஒரே தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் எண்ணற்ற தேர்வுகளை எழுத வேண்டிய சுமை நீங்குகிறது. விண்ணப்ப கட்டண செலவுகளும், தேர்வு மையத்துக்கு செல்வதற்கான பயண செலவுகளும் குறைகிறது.
ஒருமுறை இந்த தேர்வை எழுதியவர்கள் தங்கள் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ள கூடுதலாக 2 முறை பொது தகுதி தேர்வில் பங்கேற்கலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதுவே அவரது இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும்" என கூறப்பட்டுள்ளது.