Skip to main content

மின்னணு ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு...!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

ott rules and regulation

 

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதில் ‘சமூக வலைதளங்களில், தேசவிரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாகவும் இருப்பதாக அதிகாரிகள் கருதும் பதிவுகளை யார் முதலில் உருவாக்கியது என்பதைக் கண்டறியும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.

 

அத்தகைய பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்ட 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும். புகார்களை விசாரிக்க ஒரு தலைமை அதிகாரி உட்பட 3 அதிகாரிகளை சமூக வலைதளங்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும். புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீக்கப்பட்ட பதிவுகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிர்வகிக்கும்.’ 

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஓ.டி.டி. தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்குக் கடிவாளம் போடும் வகையில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது: “ஓ.டி.டி. தளங்கள், மின்னணு ஊடகங்கள், அவற்றில் செய்தி வெளியிடுபவர்கள் ஆகியோருக்கும் நடத்தை நெறிமுறைகள் பொருந்தும். ஓ.டி.டி. தளங்கள், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை யார் யார் பார்க்கலாம் என்பதற்கு, வயது அடிப்படையில் 5 பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும்.

 

ott rules and regulation

 

யு பிரிவு (அனைவரும் பார்க்கலாம்), யு/ஏ 7+ (பெற்றோர் வழிகாட்டுதலுடன் 7 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம்), யு/ஏ 13+, யு/ஏ 16+, ஏ (வயது வந்தோர் மட்டும்) ஆகிய 5 பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும். யு/ஏ 13+ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளைப் பெற்றோர் முடக்கி வைக்கும் வசதி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், அது எதைப் பற்றியது, எந்த வயதினர் பார்க்கலாம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதன்மூலம் அதைப் பார்க்கலாமா, வேண்டாமா என்பதைப் பொதுமக்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

 

அதேபோல், மின்னணு ஊடகங்களில் செய்தி வெளியிடுபவர்கள், இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் பத்திரிக்கையாளர்களுக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கேபிள் டி.வி.நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தையும் பின்பற்ற வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்