சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசின் அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மாத ஆரம்பத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அலோக் வர்மா அந்த பதவியில் நீடிப்பதில் எந்த தவறும் இல்லை என தீர்ப்பளித்தது.
மேலும் சிபிஐ இயக்குனரை தேர்ந்தெடுக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் உள்ளடங்கிய அந்த குழு சிபிஐ இயக்குனரை தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஒருமுறை கூடியது. ஆனால் முடிவேதும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது. இதனையடுத்து இரண்டாவது முறையாக இன்று காலை கூடிய இந்த குழு, சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லாவை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த நியமனத்திற்கு மத்திய அரசும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. சிபிஐ யின் புதிய இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷிகுமார் சுக்லா மத்திய பிரதேச மாநில காவல்துறை டிஜிபி யாக பணியாற்றி கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.