
சமூக வலைதளங்களில் நன்மை, தீமை இரண்டுமே உண்டு. அதில் குறிப்பிடத்தக்க நன்மைகளுள் ஒன்று, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நம்மை ஆள்பவராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களை நேரடியாக தொடர்புக்கொள்ள முடிவது. அதன்மூலம், பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. அதேபோல் ஒரு சம்பவம்தான் ஒடிசா மாநிலத்தில் நடந்திருக்கிறது.
ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரின் மண்டல போக்குவரத்துதுறை, சமீபத்தில் பேருந்களின் நேர அட்டவணையை மாற்றியமைத்தது. இதனால், மாணவர் ஒருவர் பள்ளிக்குச் செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர், ட்விட்டரில் புவனேஸ்வரின் மண்டல போக்குவரத்து துறையையும், அதன் இயக்குனரையும் டேக் செய்து, ‘நான் பள்ளிக்கு 7.30 மணிக்குச் செல்ல வேண்டும், ஆனால் எங்கள் வழித்தடத்தில் 7.40 மணிக்குத்தான் முதல் பேருந்தே கிளம்புகிறது. இதனால் பள்ளிக்குத் தாமதமாக செல்கிறேன். இதனால் பல இன்னல்களை சந்திக்கிறேன். இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றியுடன் இருப்பேன்’ என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து புவனேஸ்வர் மண்டல போக்குவரத்து துறை, அந்த மாணவர் சரியான நேரத்திற்கு பள்ளிக்குச் செல்லும் வகையில் பேருந்து நேரத்தையே மாற்றியுள்ளது. இதுதொடர்பாக புவனேஸ்வர் மண்டல போக்குவரத்து துறை இயக்குனர் அருண் போத்ரா, ட்விட்டரில் மாணவனுக்கு அளித்துள்ள பதிலில், மாணவன் வசிக்கும் வழித்தடத்தில், முதல் பேருந்து 7 மணியிலிருந்து இயங்கத் தொடங்கும். நீங்கள் இனி பள்ளிக்கு தாமதமாக செல்ல மாட்டீர்கள் எனக் கூறியுள்ளார்.
மாணவனின் கோரிக்கையை ஏற்று, பேருந்து நேரத்தை மாற்றிய புவனேஸ்வர் மண்டல போக்குவரத்து துறைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.