காரைக்காலில் தனது மகளை விட அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறி சிறுவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அந்த மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவரின் குடும்பத்தார், குற்றவாளியைக் கைது செய்தாலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் சிறுவன் உயிரிழந்ததாகப் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு அமைப்புகளும் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் புதுச்சேரி அரசு மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை அமைத்து சிறுவன் மரணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஆணையிட்டது.
மேலும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு சிலதினங்கள் முன் தங்களது அறிக்கையை மருத்துவத்துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உரிய அறிக்கை இயக்குநர் சார்பில் நேற்று வெளியானது. அதில் மாணவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக விசாரணை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளதாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குநர் நேற்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து காரைக்காலில் உரிய விளக்கம் தரவில்லை என கூறி கடையடைப்பு போராட்டம் நடந்து வரும் சூழலில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி இன்று காலை சுகாதாரத்துறை இயக்குநர் உடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து மாணவர் மருத்துவமனைக்கு வந்த பொழுது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் மறுநாள் மீண்டும் சிகிச்சைக்கு வந்த பொழுது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் என பாலாஜி மற்றும் விஜயகுமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் பணியில் அமர்த்தப்பட்ட மருத்துவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு சென்றால் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.