கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 3 தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (22.10.2024) மதியம் 1 மணியளவில் பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோரமாவு அகாரா என்ற பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டடத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மோப்ப நாயும் மீட்புப் படையினருடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறை டிஜி பிரசாந்த் குமார் தாக்கூர் கூறியதாவது, ‘கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினரின் குழுக்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டடத்தில் 5 பேர் சிக்கியுள்ளனர். கட்டிடத்தில் சுமார் 15 - 20 தொழிலாளர்கள் வசித்து வந்தனர். அவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான மெஹ்பூஸ் கூறுகையில், ‘நாங்கள் இங்கு வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள். மதியம் 1 மணியளவில் நாங்கள் உணவு இடைவேளையில் இருந்த போது, பலத்த சத்தம் கேட்டது. அப்போது கட்டிடம் குலுங்கத் தொடங்கியது. இதனையடுத்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி கட்டிடத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.
அதே போன்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் கூறுகையில், “மொத்தம் 20 பேர் அங்கு இருந்தனர். 7 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். பலத்த மழையால் கட்டிடம் இடிந்து விழுந்தது. இது 7 மாடிக் கட்டிடம். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது” எனத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் கனமழை காரணமாகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சம்பவ நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.