மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.டி.உஷா, கே.வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோரின் பின்னணி குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
பி.டி.உஷாவின் பின்னணி!
இந்தியாவில் தலை சிறந்த தடகள வீராங்கனையான பி.டி.உஷா, கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குட்டலி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். பய்யோலி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இவர், பல பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்துள்ளார். ஏற்கனவே, அர்ஜுனா விருது, மற்றும் பத்ம ஸ்ரீ விருதையும் பி.டி.உஷா பெற்றுள்ளார். இவர் விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைக்கும் லட்சக்கணக்கான பெண் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் திகழ்கிறார்.
கே.வி.விஜயேந்திர பிரசாத்தின் பின்னணி!
ஆந்திர மாநிலம், கொவ்வூரைச் சேர்ந்த கே.வி.விஜயேந்திர பிரசாத், இந்தியாவின் முன்னணி திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். இவர் பிரபல தெலுங்கு பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை ஆவர். பஜ்ரங்கி பைஜான், பாகுபலி, ஆர்ஆர் ஆர் போன்ற படங்களுக்கு கதை எழுதியவர். திரைத்துறையில் ஃபிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள கே.வி.விஜயேந்திர பிரசாத், கலைத்துறையின் பெருமை எனக் கருதப்படுகிறார்.
வீரேந்திர ஹெக்டேவின் பின்னணி!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தர்மசாலா கோவிலின் பரம்பரை நிர்வாகியான வீரேந்திர ஹெக்டே, தனது 20 வயது முதல் மக்களுக்கு தொண்டு செய்யும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்துள்ளார். கிராம மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கி, இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சேவை மற்றும் ஆன்மீகத்தைக் கலந்து பணியாற்றி வரும் இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று நான்கு மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.