90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அட்லஸ் சைக்கிள், இந்த சைக்கிள் தொழிற்சாலை, தற்போது தனது கடைசி தொழிற்சாலையையும் மூடியுள்ளது.
சுமார் 70 ஆண்டுகளாக சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனம், சைக்கிள் விற்பனை குறைவு, தற்போதைய வணிக சூழல் உள்ளிட்டவற்றால் தனது கடைசி உற்பத்தி ஆலையையும் மூடியுள்ளது. ஹரியானாவின் சோனிபேட் என்ற இடத்தில் 1951ம் ஆண்டு தொடங்கப்பட்ட அட்லஸ் நிறுவனம் 90 களின் மத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது. சொல்லப்போனால் இன்றைய 90ஸ் கிட்ஸ் அனைவருமே ஒரு அட்லஸ் சைக்கிளாவது வைத்திருந்திருப்பார்கள் எனலாம்.
இப்படி பிரபலமாக இருந்த அட்லஸ் நிறுவனம் இருசக்கர வாகனங்களின் வரத்துக் காரணமாக 2000 மாவது ஆண்டுக்குப் பின்னர் சரிய ஆரம்பித்தது. இதனையடுத்து, 2014ம் ஆண்டு மலன்பூரில் உள்ள தொழிற்சாலையையும், 2018ல் சோனிபேட்டில் உள்ள தொழிற்சாலையையும் அந்நிறுவனம் மூடியது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஷாகிபாபாத்தில் இயங்கி வந்த கடைசி ஆலையும் உலக சைக்கிள் தினமான நேற்று திடீரென மூடப்பட்டது. ஆனால், இந்த தொழிற்சாலை மூடப்படுவது குறித்து எந்த முன்னறிவிப்பும் செய்யப்படாததால், திடீரென வேலையிழந்த சுமார் 1000 தொழிலாளர்கள், நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக தொழிற்சாலை மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.