Skip to main content

‘எப்போது சரணடைவேன்’ - அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Arvind Kejriwal's answer When will he surrender

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீட்டிப்பு ஜாமீன் மனுவை நிராகரித்தது. 

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தேர்தல் பிரச்சாரம் செய்ய உச்சநீதிமன்றம் எனக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்தது. நாளை மறுநாள் (02-06-24) மீண்டும் திகார் சிறைக்கு செல்வேன். மதியம் 3 மணியளவில் சரணடைவதற்காக நான் வீட்டை விட்டு வெளியேறுவேன். இந்த முறை இவர்கள் என்னை எவ்வளவு காலம் சிறையில் அடைப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் என் உள்ளம் உயர்ந்தது. சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நான் சிறைக்குச் செல்வதில் பெருமை கொள்கிறேன். அவர்கள் என்னை பல வழிகளில் உடைக்க முயன்றனர், என்னை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை. நான் சிறையில் இருந்தபோது, ​​என்னைப் பலவிதங்களில் சித்திரவதை செய்தார்கள். என் மருந்துகளை நிறுத்திவிட்டார்கள். இவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை. 

இந்த முறை அவர்கள் என்னை மேலும் சித்திரவதை செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் நான் தலைவணங்க மாட்டேன். நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் முதல்வர் கெஜ்ரிவாலும் மகிழ்ச்சியாக இருப்பார். நான் உங்கள் மத்தியில் இருக்க மாட்டேன், ஆனால் உங்கள் எல்லா வேலைகளும் தொடரும். ஆனால் நான் எங்கு வாழ்ந்தாலும் டெல்லியின் வேலையை நிறுத்த விடமாட்டேன். இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 24 மணி நேர மின்சாரம் தொடரும், திரும்பிய பிறகு ஒவ்வொரு தாய் மற்றும் சகோதரிக்கும் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கத் தொடங்குவேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்