டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா, சன்பிரீத் சிங் ஆகியோர் திகார் சிறையில் இருந்து காணொளி மூலம் இன்று (23.04.2024) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மூவரின் நீதிமன்ற காவலையும் மே 7 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.