Skip to main content

கிராமத்திற்காக 30 ஆண்டுகளாகக் கால்வாய் வெட்டிய முதியவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஆனந்த் மஹிந்திரா...

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

anand mahindra presents a tractor to Bihar man who carved canal

 

தனது கிராமத்தின் நீர் தேவைக்காக 30 ஆண்டுகளாக தனியொருவராகக் கால்வாய் வெட்டிய முதியவருக்கு டிராக்டர் ஒன்றைப் பரிசளித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. 

 

பீகார் மாநிலம் கொத்திவாலா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லாயுங்கி புய்யான். மலைக்கிராமமான கொத்திவாலாவில் மக்களின் தேவைக்கு நீர் கிடைக்காத சூழல் நிலவிவந்துள்ளது. இதனால் அருகில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றே மக்கள் நீர் எடுத்துவரவேண்டிய நிலை இருந்துள்ளது. அக்கிராமத்தின் இந்த நிலையை மாற்ற நினைத்த லாயுங்கி செய்யான், காட்டின் மலைப் பகுதியில் இருக்கும் நீர் வீணாக ஆற்றில் கலப்பதைத் தடுத்து, அதனைத் தனது கிராமத்திற்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். ஆனால், இதற்காக ஒரு கால்வாயை வெட்டலாம் என அவர் கூறிய யோசனையை யாரும் ஏற்கவில்லை.

 

ஆனால், தனது யோசனையில் நம்பிக்கைகொண்ட லாயுங்கி புய்யான் யார் உதவியும் இன்றி தனியாகக் கால்வாய் வெட்டும் பணியைத் தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக தனியொருவராகப் பணியாற்றி பாறைகளைக் குடைந்து கிராமத்திற்காகக் கால்வாயை ஏற்படுத்தியுள்ளார். இதன் விளைவாக மலைப்பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்திற்கு தற்போது தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது.

 

இந்த முதியவரின் செயல், ஊடகங்களில் வெளியாகி பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், ஊடகம் ஒன்றில் இதுகுறித்து லாயுங்கி புய்யான் பேசுகையில், "விவசாயமும் கால்நடைகளையுமே மட்டுமே நம்பியுள்ள எனக்கு ஒரு டிராக்டர் இருந்தால் சந்தோஷம்" எனத் தெரிவித்தார். இந்நிலையில் இவரது பேட்டியைப் பார்த்த மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா உடனடியாக லாயுங்கிக்கு டிராக்டரை பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

“பா.ஜ.கவை சோதனை செய்வதற்காகவே வீடியோ வெளியிட்டேன்” - விமர்சனங்களுக்கு தேஜஸ்வி பதிலடி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Tejaswi's response to criticism

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நாடு முழுவதும் இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்தும், இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார். இதனால், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வந்த தேஜஸ்வி யாதவின் பதவி பறிக்கப்பட்டது. இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், சிபிஐ எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று (09-04-24) தேஜஸ்வி யாதவ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போது மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், “கூட்டணி கட்சி தலைவரான முகேஷ்  இன்று மீன் கொண்டு வந்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருப்பதால் வெறும் 10 - 15 நிமிடங்கள் தான் இடைவேளை இருக்கும். அதற்குள் சாப்பிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நவராத்திரி நேரத்தில், தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவதாக பா.ஜ.க அவரை கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்நிலையில், அந்த வீடியோ குறித்து பீகார் துணை முதல்வர் விஜய் சின்ஹா கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், “ஒரு சிலர் தங்களை சனாதனத்தின் மகனாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், சனாதனத்தின் மதிப்புகளை காப்பாற்றுவதில்லை. நவராத்திரி நேரத்தில் யாராவது மீன் சாப்பிடும் வீடியோவை பதிவிடுவார்களா? இதன் மூலம் ஏமாற்று அரசியலில் ஈடுபடுகிறீர்கள்” என்று கூறினார்.

பா.ஜ.கவின் விமர்சனங்களுக்கு தேஜஸ்வி யாதவ் இன்று (10-04-24) தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பா.ஜ.கவில் உள்ளவர்கள் அறிவுத்திறனை சோதனை செய்வதற்காகவே இந்த வீடியோவை நாங்கள் பதிவு செய்தேன். அந்த வீடியோவை நான் நேற்று பகிர்ந்திருந்தாலும், அது நவராத்திரிக்கு முந்தைய நாளான கடந்த 8ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பதை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதை கவனிக்காமல் எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. நாங்கள் நினைத்ததை சரி என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.