டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருவதோடு, தேர்தல் பணிகளிலும் இறங்கியுள்ளன. டெல்லியில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரச்சார களங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் வடகிழக்கு டெல்லியின் பாபர்பூர் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “காங்கிரஸ் டெல்லியை 15 ஆண்டுகள் ஆண்டது. ஆம் ஆத்மி 5 ஆண்டுகள் ஆண்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியை உலகத் தரமிக்க நகரமாக மாற்றுவோம். இது நடக்கவில்லை என்றால் நீங்கள் வந்து என் காதைப் பிடித்து கேட்கலாம்” எனப் பேசினார்.