நெய்வேலி என்.எல்.சி. விபத்து வேதனையளிக்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். என்.எல்.சி 2-ஆம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த தொழிலாளர்கள் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நெய்வேலி என்.எல்.சி.- யில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு முறை தீவிபத்துகள் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள அமித்ஷா, "நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலைய விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமியிடம் தெரிவித்துள்ளேன். ஏற்கெனவே மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.