Skip to main content

பற்றியெரியும் நகரம்; தொடரும் உயிரிழப்புகள்; விரைந்த அமித்ஷா!

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Amit Shah went to Manipur

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 80 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதனிடையே இரு சமூகத்தினருக்கும் ஏற்பட்ட கலவரத்தின் போது பிரபல குத்துச்சண்டை வீரர் மேரிகோம் எங்கள் மணிப்பூர் மாநிலம் பற்றி எறிகிறது. தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த சமயத்தில் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் பணிகள் நடந்து வந்ததால் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட முக்கிய அமைச்சர்கள் பலரும் பெங்களூருவில் முகாமிட்டிருந்தனர். மணிப்பூரில் பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட பின்பு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்தபடி மணிப்பூர் மாநில முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார்.

 

அம்மாநில ஆளுநர் மூலம், கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக சில நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மணிப்பூர் மாநிலத்திற்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், சாலை போக்குவரத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரம் நடைபெற்ற இடத்தில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அவ்வப்போது கலவரங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த உள் மாநில கலவரத்திற்குப் பிறகு மணிப்பூரில் அடிப்படை பொருட்களின் விலை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகளவில் உயர்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

 

இந்தக் கலவரங்களின் ஒரு பகுதியாக இரண்டு நாட்களுக்கு முன்பு, கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தத் தாக்குதலில் 30 கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை மணிப்பூர் சென்றுள்ளார். அங்கு இம்பாலில் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்குடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் நிவாரண உதவிகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று தலைநகர் இம்பாலில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இரு சமூக பிரதிநிதிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

 

இதையடுத்து மாநிலக் காவல்துறை, மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அவர், “மணிப்பூரில் அமைதி மற்றும் வளத்தை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாகும். அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பலத்த பாதுகாப்புடன் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Re-polling in Manipur with tight security

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள்  நிகழ்ந்தன. 

Re-polling in Manipur with tight security

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 11 வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்று (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

‘மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு’ - தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Repolling in Manipur Election Commission action

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு  வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு நாளை மறுநாள் (26.04.2024) ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளது.

இத்தகைய  சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்வம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள்  நிகழ்ந்தன.

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 11 வாக்குப்பதிவு மையங்களில் நாளை (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் வன்முறை காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு  நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.