16 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. மழைக் காரணமாக போட்டியின் விதிகளை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.
இதையடுத்து, ஐபிஎல் டிராபி சென்னை கொண்டு வரப்பட்டு, முதலில் தி நகரில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிலையில் சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த நிலையில், நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.