Skip to main content

ஆப்கன் விவகாரத்தில் அனைவரும் ஒரே மாதிரியான கருத்தை கொண்டிருக்கிறோம் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்!   

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

jaishankar

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியமைவது இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்தநிலையில், ஆப்கான் விவகாரம் தொடர்பாக இன்று (26.08.2021) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளின் அவைத்தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தார்.

 

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை குறித்து இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் அவைத் தலைவர்களுக்கும் விளக்கினோம். மீட்புப் பணிகளில் எங்களது கவனம் உள்ளது. மக்களை மீட்க அரசு எல்லாவற்றையும் செய்துவருகிறது. அரசு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தர விரும்பும் செய்தி என்னவெனில், இந்த விவகாரத்தில் அனைவரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதுதான்.

 

ஆபரேஷன் தேவி சக்தியின் கீழ், 6 விமானங்கள் மூலம் இதுவரை மீட்புப் பணிகளை செய்துள்ளோம். பெரும்பாலான இந்தியர்களைத் திரும்ப அழைத்து வந்துவிட்டோம். சிலரால் நேற்று விமான பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. நாங்கள் கண்டிப்பாக அனைவரையும் மீட்க முயற்சி செய்வோம். சில ஆப்கன் நாட்டு மக்களையும் அழைத்து வந்துள்ளோம்.

 

முடிந்தவரை விரைவாக மீட்புப் பணிகளை செய்து முடிப்பதில் அரசு மிகவும் உறுதியாகவுள்ளது. சர்வதேச முடிவுகள் எடுக்கப்படும்போதும் சரி, எந்தக் கூட்டம் நடைபெற்றாலும் சரி, நமது பங்கு அங்கீகரிக்கப்படுவதைப் பார்க்கிறோம். ஆப்கன் விவகாரத்தில் இன்னும் பல கூட்டங்கள் நடைபெறும்.”

இவ்வாறு ஜெய்ஷங்கர் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்