மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்க நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உத்தரபிரதேசத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக இணைந்துள்ளன. இதனை தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், 'வரும் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியை மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளோம். அக்கட்சிக்கு கூடுதலாக எந்த தொகுதியையும் ஒதுக்க நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணியில் இணையாவிட்டாலும், இந்த இரு தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தபோவதில்லை. மேலும் கடந்த காலங்களில் உ.பியில் இருந்து தான் பிரதமர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நிலைமை வரும் தேர்தலிலும் தொடரும். பிரதமர் வேட்பாளரை பொறுத்தவரையில் மாயாவதி தான் எனது விருப்பம், நான் அவரையே பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்' என கூறினார்.