இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். இதற்கிடையே இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக சில சலசலப்புகள் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் நாங்கள் இது குறித்துப் பேசி வருகிறோம் என்றும், மம்தாவும் திரிணாமுல் காங்கிரஸும் இந்தியா கூட்டணியின் வலுவான தூண்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எ.பி டெரிக் ஓ.ப்ரைன், மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டணி உடன்பாடு எட்டப்படாததற்கு காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரிதான் காரணம் என்றார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த ஆதீர் ரஞ்சன் சௌத்ரி, டெரிக் ஓ.ப்ரைன் ஒரு வெளிநாட்டவர். அவருக்கு இதைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெரிக் ஓ.ப்ரைன், இந்தியா கூட்டணிக்கு பல எதிர்ப்பாளர்கள் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் பாஜகவும் தான் தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு எதிராகப் பேசி வருகின்றனர். ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றி வருகிறார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெரிக் ஓ.ப்ரைனிடம் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், செய்தியாளர் சந்திப்பில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ.ப்ரைனை குறிப்பிடும்போது வெளிநாட்டவர் என்று கவனக்குறைவாகப் பேசிவிட்டேன் என்றும் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.