89 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, அதைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் வேலைபெற்ற 89 லட்சம் பேரின் ஆதார் எண்கள் பொதுவெளியில் அனைவரும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் வருமானம் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறும் 89 லட்சம் பேரின் மாநிலம், பெயர், கிராமம், ஊழியர் எண் மற்றும் ஆதார் எண்கள் பாதுகாப்பற்ற நிலையில் ஆந்திர மாநில அரசு இணையதளப் பக்கத்தில் இருந்துள்ளது. மொத்த பயனாளிகள் 1.02 கோடி பேரில் இந்த 89 லட்சம் பேர் தங்கள் அடையாள அட்டைகளோடு ஆதார் எண்ணை இணைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக இணையதளப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கோடாலி ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின் பேரில், தொழில்நுட்பத் தவறுகள் சரிசெய்யப்பட்டு, பொதுமக்களின் விவரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால், வீட்டுவசதி கார்ப்பரேசனின் பக்கத்தில் இன்னமும் 44 லட்சம் பேரின் ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கிடைப்பதாக ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார்.
பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் காக்கப்பட வேண்டும். அரசு வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் எல்லா விவரங்களையும் இப்படி வெளியிடுகிறது. ஆனால், அவற்றை அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்பதால் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது என ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.