தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த ஆண்டு பல கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், தெலங்கானா மாநிலத்தில் 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி ஆர் ஸ்) கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, காங்கிரஸுக்கு 64 இடங்களும், பி ஆர் எஸ் கட்சிக்கு 39 இடங்களும், பா.ஜ.கவுக்கு 8 இடங்களும் கிடைத்தது.
தெலுங்கானா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடைந்ததையொட்டி, அம்மாநில முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவியேற்றார். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சந்தரசேகர ராவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் காங்கிரசில் இணைந்தனர். இது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், பி ஆர் எஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஜனவரி மாதம் ஒவ்வொருவாக இணைந்து வருகின்றனர். கடந்த வாரம் வரை 9 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்.
நேற்று முன்தினம் பி ஆர் எஸ் கட்சியின் எம்.எல்.ஏவும், சந்திரசேகர ராவுக்கு நெருக்கமானவருமான மகிபால் ரெட்டி திடீரென்று முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்படி, பி ஆர் எஸ் கட்சியைச் சேர்ந்த 10வது எம்.எல்.ஏ காங்கிரஸில் இணைந்துள்ளார். இதன்மூலம், சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 75ஆக உயர்ந்துள்ளது. இதற்கு, பி ஆர் எஸ் கட்சியைச் சேர்ந்த கே.டி.ராமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.