Skip to main content

"பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்" - தேர்தல் வாக்குறுதி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021


 

ARVIND KEJRIWAL

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சிகள் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதேபோல் எதிர்க்கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்தநிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் செய்த டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

 

மோகா மாவட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாக, "வரவிருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், 18 வயதிற்கு மேலுள்ள அனைத்து பெண்களின் வங்கிக் கணக்கிலும் மாதம் 1000 ரூபாய் செலுத்தப்படும். ஒரு வீட்டில் மூன்று பெண்கள் இருந்தால் மூவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும்" என அறிவித்துள்ளார்.

 

மேலும் இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதல்வரை மறைமுகமாக விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால், "பஞ்சாபில் ஒரு போலி கெஜ்ரிவால் வலம் வந்துகொண்டிருக்கிறார். நான் இங்கு என்ன வாக்குறுதி அளித்தாலும், அதையே அவரும் திரும்ப அளிக்கிறார். நாட்டிலேயே கெஜ்ரிவால் என்ற ஒருவரால் மட்டும்தான் உங்களின் மின் கட்டணத்தைப் பூஜ்ஜியமாகக் குறைக்க முடியும். எனவே அந்த போலி கெஜ்ரிவால் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்