புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக பரவும் வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு இருக்கிறதா எனக் கண்டறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன. முகாம்களில் தங்களை பரிசோதனை செய்து கொண்டவர்களில் 2600க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
அதேபோல் புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாக 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்திருந்தார். அதன்படி ஜனவரி மாதத்தில் மட்டும் 35 பேரும், பிப்ரவரி மாதத்தில் 38 பேரும், மார்ச் மாதத்தில் 12 ஆம் தேதி வரை 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த பாதிப்புகளில் 18 பேர் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் என்பதும், மற்றொரு 18 பேர் 6 முதல் 15 வயது வரையிலான பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் நடைபெற்றது. இந்த கேள்வி நேரம் முடிந்த பின் புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் ஓர் அறிவிப்பை வெளியிடப்போவதாக சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கல்வி அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் அதிக அளவில் புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறதாகவும், இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் 26 ஆம் தேதிவரை 1 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் கூறினார். இந்த உத்தரவு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.