பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன்? என எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பினார். அப்போது எஸ்.வி.சேகர் வரும் 20ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் பேரவையில் விவாதிக்க கூடாது என சபாநாயகர் தனபால் பதில் கூறினார்.
தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெறும் வழக்கில் ஏன் நடவடிக்கை இல்லை? என எஸ்.வி.சேகர் குறித்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு, நீதிமன்ற உத்தரவுக்கு முன்பு பேசியிருந்தால் விவாதித்திருக்கலாம்.தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் பேரவையில் விவாதிக்க கூடாது. 20ஆம் தேதிக்கு பிறகு இதுகுறித்து பேசலாம் என சபாநாயகர் பதிலளித்து. மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேச அனுமதி மறுத்தார்.
எஸ்.வி.சேகர் குறித்து தொடர்ந்து பேச அனுமதிக்காததைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,
தமிழக அரசின் உயர் அதிகாரியின் உறவினர் என்பதால் எஸ்.வி.சேகரை கைது செய்ய தயக்கம் காட்டப்படுகிறது. விழாக்கள், நிகழ்ச்சிகளில் எஸ்.வி.சேகர் சுதந்திரமாக பங்கேற்கிறார். உச்சநீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் அவரை இதுவரை கைது செய்யாதது ஏன்? மத்திய அமைச்சர் முன்னிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.