























தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் 42 சுங்கச் சாவடிகளில் சுங்க வரி செலுத்த மறுத்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை காவல்துறை டி.எஸ்.பி. ராஜேந்திரன், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் உள்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 11.05 மணிக்கு உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ், இளைஞரணி அமைப்பாளர் கோபி உள்பட 500க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுமைக் கட்சியினர் வேல்முருகன் தலைமையில் வந்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். திடீரென சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடி அறை, சேர், டேபிள், கண்காணிப்பு கேமரா ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வேல்முருகன் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உளுந்தூர்பேட்டை அன்பு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
அப்போது நக்கீரன் இணையதளத்திடம் பேசிய வேல்முருகன்,
மத்திய அரசு தமிழகத்தை பல விதங்களிலும் வஞ்சிக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதோடு அதற்கான உபயோகமில்லாத காரணங்களை சொல்லி ஏமாற்றுகிறது. ஸ்டெர்லைட் போன்ற தேவையில்லாத தொழிற்சாலைகளை தமிழகத்தில் கொண்டு வந்து தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் தமிழ் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருகிறது.
இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தை மட்டும் குறி வைத்து மறைமுக தாக்குதல் நடத்துவதற்கு காரணம், தமிழகத்தில் சமூக நீதி, சாதி மதமற்ற முறையில் பல்வேறு இன மக்கள் ஒற்றுமையோடு வாழ்கிறார்கள். தமிழர்களுக்கான பண்பாடு, கலாச்சாரம் உலக அளவில் தனித்தன்மையோடு விளங்குகிறது. பாஜக எக்காலத்திலும் தமிழகத்தில் தலையெடுக்க முடியாது என்பது அவர்களுக்கு உறுதியாக தெரியும். அதனால்தான் மறைமுகமாக வடமாநிலங்களில் இருந்து ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு சார்ந்த பணிகளில் ஒரு கோடி பேருக்கு மேல் தமிழகத்தில் வேலைவாய்ப்பில் திணிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலகோடிக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நிலையில் மத்திய அரசின் சூழ்ச்சியின் மூலம் மேற்படி சம்பவங்கள் நடக்கின்றன.
மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதனால்தான் பிஎஸ்என்எல் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தினோம். இன்று 42 இடங்களில் சுங்க கட்டண வரி கொடுக்க மறுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதேபோல தமிழக மக்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தக் கூடாது. மாநில அரசும் மத்திய அரசுக்கு சேர வேண்டிய வரியை கொடுக்காமல் நிறுத்த வேண்டும். இப்படி தமிழக அரசும், தமிழக மக்களும் வரி கொடா இயக்கத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை நிறுத்துவார்கள். கடுமையான போராட்டத்தை கையில் எடுத்தால்தான் தமிழகத்திற்கு விடிவுகாலம் வரும். இவ்வாறு கூறினார்.
சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் தப்பியோடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றதும். வாகனங்கள் சென்றன. ஆனால் சுங்கச் சாவடியில் வசூல் செய்ய ஊழியர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சந்தோசமாகவும், வேகமாகவும் சென்றனர்.