சேலம் பெரியார் பல்கலையில், பல பேராசிரியர்கள் போலியான அனுபவச் சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பது தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே போலி சான்றிதழ்கள் மூலம் உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்திருப்பதும், அதற்கு தணிக்கை அதிகாரிகள் சவுக்கடி கொடுத்திருப்பதும்தான் சேலம் பெரியார் பல்கலையில் உலா வரும் லேட்டஸ்ட் பரபரப்பு.
பெரியார் பல்கலையில் கடந்த 2015&2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், பல பேராசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு பல்கலை மானியக்குழு விதிகளை மீறி சம்பளத்தை வாரி இறைத்திருப்பதும், பல கோடி ரூபாய் செலவினங்களுக்கு முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததும் தெரிய வந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பல ஆசிரியர்கள் போலி அனுபவ சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்திருப்பதையும், பணி நியமனங்கள் குறித்த பலருடைய ஆவணங்கள் தணிக்கைக்கு உட்படுத்தாமல் மறைக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி பல்கலைக்கு குட்டு வைத்திருக்கிறார்கள் தணிக்கை அதிகாரிகள்.
உதாரணத்திற்கு சில...
டெக்ஸ்டைல் துறை இணை பேராசிரியர் லட்சுமி மனோகரி, தாவரவியல் துறை பேராசிரியர் முருகேஷ், ஆங்கிலத்துறை பேராசிரியர் சங்கீதா, இணை பேராசிரியர் கோவிந்தராஜ் (ஆங்கிலம்), கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை இணை பேராசிரியர் செங்கோட்டுவேலன், மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் துறை இணை பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் ஆசிரியர் கற்பித்தல் அனுபவச்சான்றிதழை போலியாக பெற்று, பல்கலையில் சமர்ப்பித்துள்ளதாக தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இவர்கள்¢ முன்னர் பணியாற்றிய கல்லூரிகளின் முதல்வர்களிடம் இருந்து மட்டும் நேரடியாக பணி அனுபவச் சான்றிதழைப் பெற்று சமர்ப்பித்துள்ளனர். ஆனால், பல்கலை மானியக்குழு விதிகளின்படி அந்த அனுபவச் சான்றிதழ்கள் உண்மையானதுதானா என்பதற்கு கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் / தொழில்நுட்பக் கல்வி இயக்குநரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் மேற்சொன்ன ஆசிரியர்கள் ஒருவர்கூட இந்த விதியைப் பின்பற்றவில்லை.
இவை இப்படி என்றால், இன்னொரு நகைப்புக்குரிய கேலிக்கூத்தும் பல்கலையில் அரங்கேறியிருக்கிறது. கொல்லன் பட்டறையில் இரும்பு அடித்தவர்கள் எல்லாம் மெக்கானிக்கல் இன்ஜினியர் என்று சொல்ல முடியுமா?. சொல்லலாம் என்கிறது பெரியார் பல்கலை.
எப்படி எனில், மனோதத்துவ ஆலோசகராக பணியாற்றிய வெங்கடாசலம் என்பவரை சைக்காலஜி துறை பேராசிரியராக நியமித்துள்ளது பெரியார் பல்கலை. தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த முருகேசன், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் நூலகத்தில் புத்தகம் எடுத்துக்கொடுக்கும் வேலையை மட்டுமே செய்து வந்த முருகன், நூலக அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவருக்குமே அவரவர் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆசிரியராக பணியாற்றிய முன்அனுபவமே இல்லாதவர்கள்.
பல்கலை மானியக்குழு விதி எண்: எப்3/09, நாள்: 30.6.2010ன் படி, ஆசிரியர் பணிக்கு வரக்கூடிய ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் அல்லது அத்துறை தொடர்பான ஆராய்ச்சிப்பணியில் இருந்திருக்க வேண்டும். இந்த விதிகளுக்கு முரணாக மேற்கண்ட மூவரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
தணிக்கை அறிக்கையில், பணி நியமனங்களில் உள்ள மேலும் சில முரண்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அதாவது, பயோகெமிஸ்ட்ரி பாடத்தில் பட்டமேற்படிப்பை முடித்துள்ள உதவி பேராசிரியர் கார்த்திகேயன், உணவு அறிவியல் துறையிலும், தாவரவியல் துறையில் பட்டம் பெற்றுள்ள உதவி பேராசிரியர் இளங்கோவன், உயிரி தொழில்நுட்பத் துறையிலும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸூக்கும் கணிதத்திற்கும் ஏதாவது நேரடி தொடர்பு உண்டா? ஆனால், கொஞ்சமும் தர்க்க நியாயமே இல்லாமல் கணிதத்தில் எம்.எஸ்சி., பிஹெச்.டி., முடித்துள்ள பேராசிரியர் தங்கவேலை, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் நியமித்துள்ளனர்.
அதேபோல் சுற்றுச்சூழல் அறிவியலில் பட்டம் பெற்ற உதவி பேராசிரியர் அய்யாசாமியை மைக்ரோபயாலஜி துறையிலும், விலங்கியல் துறையில் பட்டம் பெற்றுள்ள உதவி பேராசிரியர் சிவக்குமாரை சுற்றுச்சூழல் அறிவியல் துறையிலும் நியமித்துள்ளனர்.
படித்த துறையை விட்டுவிட்டு வேறு துறைகளில் ஆசிரியராக நியமிப்பதும் பல்கலை மானியக்குழு விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். குறைந்தபட்சம் அவர்கள் படித்த படிப்புக்கும், பணியாற்றும் துறையும் நிகரானதுதான் என்றாவது நிரூபித்திருக்க வேண்டும். அதையும் பெரியார் பல்கலை நிர்வாகம் தவற விட்டிருக்கிறது. மேலும், இப்படி துறை மாறி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி நியமன ஆவணங்களும் தணிக்கைக்கு உட்படுத்தாமல் திட்டமிட்டு மறைத்துள்ளது பெரியார் பல்கலை.
இப்படி தணிக்கை அறிக்கையில் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி வாய் திறக்காமல் பெரியார் பல்கலை நிர்வாகம் தொடர்ந்து மவுனம் காத்து வருவதன் மர்மம்தான் என்னவோ?